
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களுக்கு நள்ளிரவு 2 மணி வரை அனுமதி அளித்து கலெக்டர் வல்லவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொரோனா தொற்று பரவலைத் தொடர்ந்து புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பொதுமக்கள் முககவசம் அணியவேண்டும், சமூக இடை வெளியை கடைப்பிடிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து புத்தாண்டு கொண்டாட புதுச்சேரிக்கு இப்போதே ஏராளமானோர் வந்து குவிந்துள்ளனர். இன்னும் அதிக பேர் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
கடற்கரை சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதுடன் நள்ளிரவு 1 மணி வரை மட்டுமே கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெறும் என்பதால் அதில் பங்கேற்கும் மக்கள் வெளியே செல்ல நேரம் அதிகமாகும். எனவே, புத்தாண்டு கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் வந்தன. இதைத் தொடர்ந்து நேர நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, வழிபாட்டு தலங்களில் மட்டும் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு 2 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவினை புதுச்சேரி கலெக்டர் வல்லவன் பிறப்பித்துள்ளார்.