மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆயத்தப் பணிகள் இன்று பூஜையுடன் கோலாகலமாக தொடங்கியது.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜன.15-ம் தேதியும், பாலமேட்டில் 16-ம் தேதியும், அலங்காநல்லூரில் 17-ம் தேதியும் நடைபெற உள்ளது.
பாலமேட்டில், ஜல்லிக்கட்டு பணிகளை பாலமேடு பேரூராட்சி நிர்வாகம், பொது மகாலிங்க மடத்துக் கமிட்டியினர் இணைந்து வாடிவாசலில் சிறப்பு பூஜையுடன் பணிகளை தொடங்கினர். இதனை தொடர்ந்து வாடிவாசலின் முன் உள்ள மைதானத்தை ஜேசிபி இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.
இந்த ஆண்டு நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் கார், இருசக்கர வாகனம், எல்இடி டிவி, தங்கம் மற்றும் வெள்ளிக் காசு, சைக்கிள் போன்ற பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில் சுமார் 700 காளைகளும், 400 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர். மேலும், காளைகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் ஆன்லைன் முறையிலேயே இந்த ஆண்டும் டோக்கன் வழங்கப்படும் என ஜல்லிக்கட்டு கமிட்டி தெரிவித்துள்ளது.