வடகொரியாவில் அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க அந்நாட்டு அதிபர் கிம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளான தென்கொரியா, ஜப்பானை அச்சுறுத்தும் வகையில் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. 2022-ம் ஆண்டின் கடைசி நாளான நேற்று முன்தினம் 3 ஏவுகணைகளை சோதித்து, அதிர வைத்த வடகொரியா, இந்த ஆண்டின் முதல் நாளான நேற்றும் ஏவுகணை சோதனையை நடத்தியது.
தலைநகர் பியாங்யாங்கில் இருந்து பாலிஸ்டிக் ரக ஏவுகணையை வீசியதாகவும், அந்த ஏவுகணை 400 கி.மீ. தூரம் வரை பறந்து கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே கடலில் விழுந்ததாகவும் தென்கொரியா ராணுவம் தெரிவித்தது.
இந்த நிலையில் பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், நாட்டின் அணுஆயுத உற்பத்தியை அதிகரிக்க உத்தரவிட்டார்.
மனித வரலாற்றில் முன்னோடியில்லாத வகையில் வட கொரியாவை தனிமைப்படுத்துவதிலும், திணறடிப்பதிலும் அமெரிக்கா மற்றும் தென்கொரியா தற்போது ஆர்வமாக உள்ளனர் என்று அவர் கூறினார். தற்போது நிலவும் சூழ்நிலையானது, நமது ராணுவ பலத்தை பெருமளவில் அதிகரிக்க இரட்டிப்பு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதை அவசியமாக்கியுள்ளது என்று கிம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் அணுஆயுத உற்பத்தியை அதிவேகத்தில் அதிகரிக்க அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கிம் கூறினார். இதனால் கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழல் அதிகரித்துள்ளது.
newstm.in