செந்தில் பாலாஜியின் அடுத்த இலக்கு முதல்வர் பதவிதான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜய பாஸ்கரின் வாகனத்தை தாக்கி, கரூர் நகராட்சி கவுன்சிலர் கடத்தப்பட்டதை கண்டித்து, கரூரில் அதிமுக சார்பில் கண்டன பொதுக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக தொண்டர்கள் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும் அவர்கள் கழகமே கோவில் என்று இருந்து வருகின்றனர். தொண்டர்களுக்காகவே உள்ள இயக்கம் அதிமுக. அதனால், யாரும் கூறுவதற்கு முன்பு கரூரில் கண்டன பொதுக் கூட்டத்தை அறிவித்தவர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார்.
செந்தில் பாலாஜி அடுத்ததாக போக உள்ள கட்சி பாஜக தான். செந்தில் பாலாஜியின் நடிப்பை ஜெயலலிதா அவர்கள் புரிந்து கொள்ளவே காலம் தாமதம் ஆகியது. செந்தில் பாலாஜியின் அடுத்த திட்டமே முதல்வர் ஆவது தான். கரூரில் முதல்வரின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இங்கு செந்தில்பாலாஜியை தாண்டி உளவுத்துறை எதையும் தலைமைக்கு கொண்டு செல்வதில்லை.
முதல்வர் ஸ்டாலின் குடும்பம் செந்தில் பாலாஜியை அவ்வளவு நம்புகிறார்கள். ஆனால் செந்தில் பாலாஜி, இவர்கள் அனைவரையும் கீழே தள்ளிவிட்டுவிட்டு அடுத்த முதல்வர் ஆகிவிடுவார். இதை ஸ்டாலினுக்கு ஒரு எச்சரிக்கையாக கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.