அமைச்சர் மீது பாலியல் புகார் அளித்தவருக்கு மிரட்டல்!…

ரூ.1 கோடி தருகிறோம், நாட்டை விட்டு போ என அரியானா அமைச்சர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த பெண் பயிற்சியாளருக்கு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான சந்தீப் சிங்,அரியானா மாநில விளையாட்டு துறை அமைச்சராக இருந்தார். இவர் மீது முன்னாள் தேசிய அளவிலான வீராங்கனையும், ஜூனியர் தடகள பெண் பயிற்சியாளரான ஒருவர் பாலியல் புகார் கூறி உள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங் எனக்கு இன்ஸ்டாகிராமில் செய்தி அனுப்பினார். அதில், எனது தேசிய விளையாட்டு சான்றிதழ் நிலுவையில் இருப்பதாகவும், இது தொடர்பாக சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.

 

என்னிடம் இருந்த சில ஆவணங்களுடன் சந்தீப் சிங்கை அவரது முகாம் அலுவலகத்தில் சந்திக்க சென்றேன். அங்கு சென்றபோது, அமைச்சர் என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் என்னை அவரது வீட்டில் இருந்த ஓர் அறைக்கு அழைத்து சென்றார். என் ஆவணங்களை மேசையில் வைத்து விட்டு என் காலில் கை வைத்தார் என்று கூறினார்.

உன்னை முதல் முறையாக பார்த்தபோது, எனக்கு பிடித்து விட்டது என்று அமைச்சர் கூறியதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், நான் உன்னை மகிழ்ச்சியாக வைத்திருப்பேன் என்று கூறினார். அவர் என் மீது வைத்த கையை தட்டிவிட்டேன். அவர் என் டி-ஷர்ட்டை கிழித்துவிட்டார். நான் அழுது கொண்டே இருந்தேன், உதவிக்காக சத்தம் போட்டேன். அவருடைய ஊழியர்கள் அனைவரும் இருந்தபோதிலும், யாரும் எனக்கு உதவவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளார்.

 

 

அரியானா பெண் பயிற்சியாளர் அளித்த புகாரின் பேரில், 354, 354ஏ, 354பி, 342, 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என நிராகரித்த விளையாட்டு துறை அமைச்சர் சந்தீப் சிங், முதலமைச்சர் மனோகர் லால் கட்டாரிடம் தனது விளையாட்டு இலாகாவை ஒப்படைத்ததாக கூறினார். எனினும் அவர் அமைச்சரவையில் இருந்து விலகவில்லை.

ஒலிம்பிக் அளவிலான தடகள வீரர் மற்ற தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களிடம் எப்படி தவறாக நடந்து கொள்கிறார் என அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று புகார் அளித்த பெண் பயிற்சியாளர் கூறியுள்ளார்.

இந்த வழக்கு பற்றி செய்தியாளர்களிடம் பெண் பயிற்சியாளர் பேசும்போது, அரியானா போலீசார் என் மீது அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார். எனக்கு தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் வந்தபடி உள்ளன. எந்த நாட்டுக்கு வேண்டுமென்றாலும் போ. மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி தருகிறோம் என மிரட்டல் விடப்படுகிறது என்று கூறியுள்ளார்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.