விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கூடுதல் சிகிச்சைக்காக மாற்றப்பட உள்ளார்.
ரிஷப் பண்ட்-இன் நெற்றியில் 2 காயங்கள், வலது கால் மற்றும் வலது கை மூட்டில் காயங்கள், குதிகால், பாதம் மற்றும் முதுகிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் சிகிச்சைக்காக ரிஷப் பண்ட் மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறார்.
இதனை டெல்லி கிரிக்கெட் சங்க தலைவர் ஷியாம் சர்மா கூறியுள்ளார். விபத்து ஏற்பட்டதில் இருந்து ரிஷப் பந்தின் குடும்பத்தினருடன் அவர் தொடர்பில் உள்ளார். அவரது மூட்டின் இணைப்பில் காயம் ஏற்பட்டிருக்கிறது.
அதனை குணப்படுத்த அவரை மும்பை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உள்ளதாக ஷியாம் சர்மா கூறியுள்ளார். தற்போது ரிஷப் பண்ட்டால் சரிவர நடக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
மும்பையில் பிசிசிஐ மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஸ்கேன் எடுக்கப்பட்டதில் முதுகுத் தண்டு, மூளை ஆகியவற்றிற்கு பண்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சிகிச்சை காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடர், அதன் பின்னர் நடைபெறவுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் உள்ளிட்டவற்றில் பண்ட் பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in