தலைநகர் டெல்லியில் கடந்த ஆண்டு 4,469 பேருக்கு டெங்கு தொற்று பதிவாகியுள்ளது. அதே நேரத்தில், 2022-ம் ஆண்டில் டெங்குவால் 9 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, டெல்லி மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, ‘2022-ம் ஆண்டில் 4,469 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் 108 டெங்கு வழக்குகள் பதிவாகியுள்ளன. 2022-ம் ஆண்டில் மலேரியாவால் ஒருவர் உயிரிழந்தார்.
2017, 2018, 2019 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் டெல்லியில் மலேரியாவால் உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. 2020ல் ஒருவர் பலியாகியுள்ளார். அதேசமயம், டிசம்பர் கடைசி வாரத்தில், டிசம்பர் 31 வரை சிக்குன்குனியா வழக்கு ஒன்று மட்டும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டில் 48 சிக்குன்குனியா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்குன்குனியாவால் யாரும் இறக்கவில்லை’ என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது.