சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை அரை இறுதியில் இந்திய அணி இங்கிலாந்திடம் மோசமாக தோற்று வெளியேறியது. இதனால் இந்திய அணி மீது கடுமையான விமர்சனம் எழுந்தது. இதை தொடர்ந்து சேத்தன் சர்மா தலைமயிலான தேர்வுக்குழு கலைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, புதிய தேர்வுக்குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ மேற்கொண்டது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், “2022ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 5 பதவிகளுக்கான விளம்பரம் வெளியிட்டதைத் தொடர்ந்து, சுமார் 600 விண்ணப்பங்கள் வரப்பெற்றன. விண்ணப்பங்களை கவனமாக பரிசீலித்த பிறகு, தனிப்பட்ட நேர்காணல்களுக்கு 11 நபர்களை ஆலோசனைக் குழு பட்டியலிட்டது. நேர்காணல்களின் அடிப்படையில், தேர்வுக் குழுவிற்கு தேர்வானர்களின் பெயர்களை ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் கிரிக்கெட் ஆலோசனை குழு பரிந்துரையின் பேரில் , இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக மீண்டும் சேத்தன் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்வுக்குழு உறுப்பினர்களாக ஷிவ் சுந்தர் தாஸ், சுப்ரதோ பானர்ஜி, சலீல் அங்கோலா, ஸ்ரீதரன் சரத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.