அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கும் திட்டம் நாளை முதல் (ஜனவரி 9) தொடங்கப்படுகிறது.
2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, ஆயிரம் ரூபாய் ரொக்கத் தொகை ஆகியவற்றுடன் முழு நீளக் கரும்பு வழங்கப்படும்.
அரிசி, சா்க்கரை ஆகியன ஏற்கெனவே நியாயவிலைக் கடைகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், முழுநீளக் கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மாநிலத்தில் உள்ள 17 மாவட்டங்களில் இருந்து கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு, அவை லாரி உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. கரும்பு கொள்முதலுக்காக மட்டும் ரூ.71 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கப்பட உள்ளது. சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா்.
டோக்கன்கள் ஏற்கெனவே குடும்ப அட்டைதாரா்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமாா் 150 முதல் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவா்களுக்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் டோக்கன்களில் அச்சிடப்பட்டுள்ளன. குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வந்து பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழக அரசு ஏற்கெனவே அறிவுறுத்தியுள்ளது.
newstm.in