அனுமதி அட்டை இல்லாத யாரும் விமான நிலையத்திற்குள் நுழைய முடியாது. அனுமதி அட்டையுடன் கைரேகை பதிவும் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. என, சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது; ‘விமான நிலையத்திற்குள் விமான நிலைய ஊழியர்கள், விமான நிறுவன ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் அதிகாரிகள் என 17 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சென்றுவர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ஒவ்வொருவருக்கும் அடையாள அட்டையுடன் கூடிய உள்ளே நுழைவதற்கான தனி அனுமதி அட்டை வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் யார் யாருக்கு எங்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இந்நிலையில், அனுமதி அட்டை இல்லாத யாரும் விமான நிலையத்திற்குள் நுழைய முடியாது. அனுமதி அட்டையுடன் கைரேகை பதிவும் தற்போது அவசியமாக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் இந்த நடைமுறை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் விரல் ரேகை பதிவு செய்து அடையாள அனுமதி அட்டையை காண்பித்தால் மட்டுமே உள்ளே செல்ல முடியும்.
இந்த நடைமுறை வருகிற 16-ம் தேதி முதல் சென்னை விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களிலும் அமலுக்கு வருகிறது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் கைரேகை பதிவு செய்யும் பணி 50 % முடிவடைந்துள்ளது. மேலும் விரைவில் 100% முடிவடைந்து புதிய நடைமுறை அமலுக்கு வரும். இந்த புதிய நவீன முனையத்திலும் புதிய நடைமுறைக்கான கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது’ என அவர்கள் தெரிவித்தனர்.