நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பல்வேறு நகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட இடங்களில் பல்வேறு நகரில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.
இந்த நிலையில், பஞ்சாபில் அனைத்து நகரங்களிலும், கிராமங்களிலும் கடும் குளிர் நிலவி வருகிறது. இதை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜனவரி 8-ம் தேதி வரை குளிர்கால விடுமுறை விடப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடுமையான பனிமூட்டம் காரணமாக பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. வடமாநிலங்களில் ஜனவரி 10 முதல் குளிர் குறையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பஞ்சாபில் குளிரின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளதால், வரும் 14-ம் தேதி வரை குளிர்கால விடுமுறையை நீட்டித்து அம்மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதேபோல் மாணவர்களின் நலன் கருதி ஜெய்ப்பூர் மாவட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 14-ம் தேதி வரை விடுமுறை நீட்டித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிகள் ஜனவரி 16-ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.