தெலங்கானா மாநிலம் வாரங்கல் மில்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது பழைய இரும்புக்கடையில் வேலை பார்த்து வந்த 27 வயது இளைஞருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர்.
இந்த நிலையில் அந்த இளைஞர் சிறுமியை ஒரு நாள் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். வீட்டில் யாருமில்லாததை பயன்படுத்தி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இது போல பலமுறை அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதையறிந்த அந்த இளைஞரின் 22 வயது தம்பியும், அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த ஒரு மாதமாக அந்த சிறுமியை, அண்ணன், தம்பி இருவரும் மாறி மாறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அந்த சிறுமி மனஅழுத்தத்திற்கு உள்ளானார். அவரின் நடவடிக்கையைக் கண்ட பெற்றோர், அவரிடம் விசாரித்த போது, தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அத்துடன் அந்த சிறுமியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அண்ணன், தம்பி இருவர் சிறுமியை பலாத்காரம் செய்ததை அறிந்த பாஜகவினர், சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த வாகனங்களையும், பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் நேற்று முன்தினம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று அவர்கள் போலீசார் மீது குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்த அண்ணன், தம்பி ஆகியோர் மீது போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் கைது செய்தனர். அத்துடன் அவர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.