சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ‘ஜெயிலர்’ படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குகிறார். ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு ரஜினிகாந்த் நடிக்கும் இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், வசந்த் ரவி, வினாயகன், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார்.
இப்படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் இதன் படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது, ஜெயிலர் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வரும் நிலையில், அங்கு தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்டு வருகிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் ஐதராபாத் ஜூப்லி ஹில்ஸில் உள்ள ஆந்திர முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு நேற்று சென்றார் ரஜினிகாந்த். அவரை பொன்னாடை அணிவித்து வரவேற்றார் சந்திரபாபு நாயுடு.
மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பில் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து கேட்டறிந்த சந்திரபாபு நாயுடு, ஜெயிலர் திரைப்பட படப்பிடிப்பு எப்படி செல்கிறது என்றும் கேட்டுள்ளார். ஆந்திர, தமிழ்நாடு அரசியல் சூழல்கள் குறித்து விவாதித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சந்திரபாபு நாயுடு, “என் அன்பு நண்பர் ‘தலைவர்’ ரஜினிகாந்தை சந்தித்து உரையாடியதில் மகிழ்ச்சி” என்று பதிவிட்டுள்ளார்.