2023ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று ஆளுநர் ரவி உரையுடன் தொடங்கியது. சுமார் 50 நிமிடங்கள் வரை உரையாற்றிய ஆளுநர் தமிழக அரசின் கொள்கைகளை விளக்கினார்.
இருப்பினும் அவர் திராவிட மாடல், அண்ணா, பெரியார் உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும் , மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வேண்டும் என்ற வாசகத்தையும் தவிர்த்து விட்டார்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளிலும் ஆளுநர் உரைக்குப் பிறகு கூட்டம் முடிவடைந்து விடும்.
ஆனால் சட்டமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஆளுநர் உரைக்கு பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று பேசினார் . அவர் ஆளுநர் தானாக கூறிய சொந்த கருத்துக்களை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று கூறினார்.
மேலும், ஆளுநர் திராவிட மாடல் ஆட்சி மற்றும் தலைவர்களின் பெயர்களை குறிப்பிடாததற்கு தனது கண்டனங்களை பதிவு செய்தார். இதையடுத்து ஆளுநர் ரவி சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்கு முன்பே அவையில் இருந்து பாதியிலேயே வெளியேறினார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய சம்பவத்தை தொடர்ந்து ஆளுநர் ரவி வெளியேறவேண்டும் என்று பலர் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டனர்.
ஆளுநர் ரவி வெளியேற வேண்டும் என்று ‘கெட் அவுட் ரவி’ (GetOutRavi) என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டானது. தமிழ்நாடு அரசியலில் ஆளுநர் ரவியின் செயல்பாடுகள், அவரின் கருத்துக்கள் சமீப நாட்களாக கடுமையான விமர்சனத்தை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.
newstm.in