இன்று விநாயகரை வழிபட்டால் சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்..!!

விநாயகர் முழு முதற்கடவுள் ஆவார். விநாயகர் என்ற சொல்லுக்கு ‘தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன்’ என்று பொருள். விக்னங்களுக்கு அதிபதியான அவர், நாம் தொடங்கும் சுபகாரியங்களுக்கு இடையூறு எதுவும் ஏற்படாமல் அருளாசி புரிகிறார். நினைத்த காரியம், தொடங்கும் செயல்கள் எதுவாயினும் இலகுவாக முடிய, விநாயகரின் திருவருள் முக்கியமானது. அதனால் தான் எந்த ஒரு செயலையும் தொடங்கும் போது, விநாயகர் பூஜையை முதலில் செய்கின்றனர்.

சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய இந்த சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் வேண்டியது மட்டுமல்ல, நமக்குக் கிடைக்க வேண்டிய அத்தனை வரங்களும் நமக்கு கிடைத்து விடும். பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கட ஹர சதுர்த்தி. சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி. பௌர்ணமிக்கு அடுத்ததாக வரும் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சங்கடஹர சதுர்த்தியாகும். இது இருள் சூழும் மாலை நேரத்தில் வரும். நமக்கு வரும் துன்பங்களை, தடைகளை, கஷ்டங்களை தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒரு சிறப்பு மிக்க விரதம் இது. மனிதருக்கு மட்டும் அல்ல. தெய்வங்களுக்கும், தேவர் களுக்கும் கூட கஷ்டங்கள் வந்த போது, அவர்கள் பிள்ளையாரை வணங்கி நலம் பெற்றுள்ளனர்.

சங்கடஹர சதுர்த்தி வரும் அதிகாலையில் எழுந்து வீட்டில் உள்ள விநாயகரை முதலில் தரிசித்து விட வேண்டும். பின்னர் குளித்து முடித்து விநாயகருக்கு விளக்கேற்றி, அருகம்புல் அல்லது கிடைத்த மலர்களை வைத்து பூஜிக்கலாம். தூப தீப, நைவேத்தியம் செய்வது சிறப்பானது. அன்று முழுவதும் அதாவது மாலை வரை உபவாசம் இருப்பது நல்லது. மாலை வேளையில் அருகில் உள்ள கணபதி கோயிலுக்குச் சென்று சங்கடஹர சதுர்த்தி பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். வசதி இருந்தால் அபிஷேகம், அர்ச்சனை செய்யலாம். பிரசாதமும் அளிக்கலாம். வழிபட்டு வீடு திரும்பும்போது அந்த நாளைய சந்திரனை தரிசித்து வேண்ட வேண்டும்.

அதன்பிறகு உணவு முடித்து விரதத்தை பூர்த்தி செய்யலாம். முடியாதவர்கள் பால், பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். தேய்பிறை செவ்வாய்க்கிழமை அன்று வரும் சதுர்த்தி திதியில் துவங்கி ஓர் ஆண்டு முழுமையாக இந்த விரதம் இருந்தால் எண்ணியது எண்ணியவாறே நடக்கும். எல்லா காரியமும் தடையின்றி நடக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த விரதத்தால் தீராத நோய் தீரும். நிலையான இன்பம் கிட்டும். கல்வி அறிவு, புத்திக் கூர்மை, காரியங்களில் வெற்றி, நீண்ட ஆயுள், நிலையான ஆரோக்கியம், நன்மக்கட்பேறு, பெருமைக்கு உரிய புகழ் என எல்லா நன்மைகளையும் அடைய முடியும் என்று புராணங்கள் சொல்கின்றன. சனி தோஷத்திற்கு ஆட்பட்டு கஷ்டம் அனுபவிப்பவர்களுக்கு இந்த விரதம் ஒரு நல்ல விடிவு என்றே சொல்லலாம்.

தன்னைக் கிண்டல் செய்த சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் அனுக்கிரஹம் பெற்றான். எனவே இந்த நாளில் கணபதியை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது. வாழ்வின் எல்லா நலன்களையும் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதத்தின் மகிமையை உணர்ந்து பலன் பெறுவோம்.

விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும், விரதத்தில் மிகச் சிறந்ததும், சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுக்கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் என்பது ஐதீகம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.