
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் ‘பதான்’ திரைப்பட ட்ரெய்லரை நடிகர் விஜய் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள ‘பதான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான். பிரபல ஹிந்திப் பட தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் பிலிம்ஸின் 50வது படமாக இந்தப் படம் உருவாகிறது. இதில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்துள்ளார். மேலும் ஜான் ஆபிரஹாம், டிம்பிள் கபாடியா உள்ளிட்ட நட்சத்திரங்களும் படத்தில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில் காவி நிறத்தில் தீபிகா படுகோன் பிகினி அணிந்திருந்தது வலதுசாரிகளின் எதிர்ப்பைப் பெற்றது. படத்தை ரிலீஸ் செய்ய விட மாட்டோம் எனவும் மிரட்டல் விடுத்தனர். இதற்கிடையே, தற்போது ‘பதான்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

இதனை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “ஷாருக்கான் சாருக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ட்ரெய்லர் இங்கே” எனக் குறிப்பிட்டுள்ளார். அவருக்கும் ஷாருக்கானுக்கும் இடையேயான நட்பு அனைவரும் அறிந்ததே. அட்லீயின் பிறந்தநாள் விழாவில் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட படங்கள் இணையத்தில் வைரலாகின.