
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு என்பதை விட தமிழகம் என்று அழைப்பது தான் சரி என்று ஆளுநர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தின. இந்த நிலையில் நேற்று தமிழ்நாடு சட்டப்பேரவை ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

அப்போது உரையாற்றிய ஆளுநர், தமிழ்நாடு அரசு என்பதற்கு பதிலாக இந்த அரசு எனக் குறிப்பிட்டார். இதற்கு எதிராக முதல்வர் தீர்மானம் முன்மொழிந்த நிலையில், ஆளுநர் பாதியிலேயே வெளியேறினார். இந்த சர்ச்சை முடிவுக்கு வரும் முன்பே, பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை அனுப்பிய அழைப்பிதழ் மீண்டும் ஒரு சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது.
இந்நிலையில், ஆளுநர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என்ற பெயரை மாற்றம் செய்து “தமிழகம்” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு பொங்கல், சித்திரை விழா அழைப்பிதழ்களில் தமிழ்நாடு ஆளுநர் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், நடப்பாண்டு பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு ஆளுநர் என்பதற்கு பதில் தமிழக ஆளுநர் என்று குறிப்பிட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் அரசியல் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநர் மாளிகையில் இருந்து சித்திரை விழாவுக்கு வந்த அழைப்பில் “தமிழ்நாடு ஆளுநர்” என்று இருந்தது. இப்பொழுது பொங்கல் விழாவுக்கு வந்துள்ள அழைப்பில் “தமிழக ஆளுநர்” என்று இருக்கிறது. நேற்று அவையிலிருந்து வெளியேறிய அதே வேகத்தோடு மாநிலத்தைவிட்டு இவர் வெளியேற்றப்பட வேண்டும்” என்று விமர்சித்துள்ளார்.