புதுச்சேரியில், புதிதாக16 ஆயிரத்து 769 முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது என அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தெரிவித்தார்.
புதுச்சேரி வேளாண் துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் இன்று (ஜன.12-ம் தேதி) நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர், “முதல்வர் ரங்கசாமி தலைமையிலான அரசு பதவியேற்ற பின் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய தொகையை தொடர்ந்து வழங்கி வருகிறோம். பாசிக் நிர்வாகத்தில் இடுபொருட்கள் வழங்குவது தொடர்பாக சில பிரச்சனைகள் இருந்தது. அதை சரிசெய்து வருகிறோம். தோட்டக்கலை உற்பத்திக்கும் மானியம் வழங்கப்படுகிறது.
2020-2021-ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை புதுவை, காரைக்கால் பிராந்தியத்தில் 9 ஆயிரத்து 511 விவசாயிகளுக்கு ரூ.13 கோடியே 22 லட்சம் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஏனாமைச் சேர்ந்த 334 விவசாயிகளுக்கு ரூ.54 லட்சம் அவரவர் வங்கிக்கணக்கில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தபடி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் மூலம் புதிதாக 16 ஆயிரத்து 769 முதியோர் மற்றும் விதவைகளுக்கு உதவித்தொகை அளிப்பதற்கான கோப்பு முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்து கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்த கோப்புக்கு கவர்னர் ஒப்புதல் பெற்றவுடன் ஓரிரு தினங்களில் மேற்கண்ட உதவித்தொகை வழங்கப்படும்.
கரசூர் பகுதியில் மரங்கள் வெட்டப்பட்டது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. மரங்கள் மற்றும் டிராக்டரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுதொடர்பாக செயற்கைகோள் படத்துடன் எவ்வளவு மரங்கள் வெட்டப்பட்டுள்ளது என்பதை கண்டறியும் பணி நடக்கிறது. பறவைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் பணியும் நடக்கிறது. தமிழகம் போன்ற வனபாதுகாப்பு அமைப்பு நம்மிடம் இல்லாததால் காவல்துறை உதவியுடன்தான் இவற்றை செய்ய வேண்டியுள்ளது” என்று கூறினார்.