ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தைச் சேர்ந்த இரட்டையர்கள் சுமேர் சிங் (25) மற்றும் சோஹன் சிங் (25). இவர்களுக்கு 2 தம்பி தங்கைகளும் இருக்கிறார்கள். சுமேர் சிங்கும், சோஹன் சிங்கும் சிறு வயதில் இருந்தே ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு வைத்திருந்தனர். எங்கு சென்றாலும் ஒரே மாதிரியாக உடை அணிந்து செல்வதையும், எந்த சூழலிலும் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காததையும் பார்த்து ஊரே மெச்சியுள்ளது.
இவர்களில் சுமேர் சிங்குக்கு சரியாக படிப்பு வரவில்லை என்பதால் ப்ளஸ் 2 முடித்துவிட்டு, குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சோஹன் சிங் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஜெய்ப்பூரில் தங்கி தயாராகி வந்துள்ளார். சோஹன் சிங்கின் படிப்பு செலவுக்கு சுமேர் சிங் பணம் அனுப்பி வந்துள்ளார். சோஹன் சிங்கை எப்படியாவது ஆசிரியராக ஆக்கிவிட வேண்டும் என்பதே சுமேர் சிங்கின் ஆசையாக இருந்துள்ளது. இவ்வாறு இருவரும் 900 கி.மீ. இடைவெளியில் வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சுகேர் சிங் நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில், தான் தங்கியிருந்த வீட்டின் மொட்டை மாடி திண்டில் அமர்ந்து போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அங்கிருந்தவர்கள் அவரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரது செல்போன் லாக் செய்யப்பட்டிருந்ததால் வீட்டில் இருப்பவர்களுக்கு அவரது நண்பர்களால் தொடர்புகொள்ள முடியவில்லை. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
அதே சமயத்தில், அவரது சகோதரர் சோஹன் சிங் வீட்டுக்கு தண்ணீர் எடுப்பதற்காக சற்று தூரத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு சென்றுள்ளார். தண்ணீர் எடுக்கும் போது அவரும் நிலைத்தடுமாறி தொட்டிக்குள் விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆனால், இவர் இறந்தது யாருக்கும் தெரியவில்லை. இந்நிலையில், சுமேரின் நண்பர்கள் ஒருவழியாக அவரது பெற்றோரின் செல்போனை தொடர்புகொண்டு மாடியில் இருந்து சுமேர் விழுந்து இறந்ததை தெரிவித்துள்ளனர்.
இதை கேட்டு அவரது பெற்றோரும், சகோதரர்களும் கதறி அழுதுள்ளனர். பின்னர் சோஹனிடம் இதுகுறித்து தெரிவிக்க அவர் தேடிய போது, அவரும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து உயிரிழந்திருப்பது தெரியவந்தது. இரட்டையர்கள் ஒரே நாளில் ஒரு சில மணிநேர இடைவெளியில் வினோதமான சூழலில் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, அவர்களின் உறவினர்கள் இருவரின் உடல்களையும் ஒரே விறகு அடுக்கில் அருகருகே கிடத்தி சிதைமூட்டினர்.