வாகனங்களின் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல் கட்டண உயர்வுக்கு ஐகோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த உத்தரவின் மூலம் அனைத்து வாகனங்களின் உரிமையாளர்களும் பயனடைவார்கள்.
மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து புதுச்சேரி அரசின் போக்குவரத்து துறையானது புதுவையில் இயங்கும் 15 ஆண்டுகள் முடிந்த அனைத்து வாகனங்களுக்கும் தகுதி சான்றிதழ் புதுப்பித்தல், காலதாமத அபராதம் மற்றும் பதிவு போன்ற அனைத்து கட்டணங்களையும் உயர்த்தியது. இதற்கு வாகன ஓட்டிகளும், உரிமையாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பலகட்ட போராட்டங்களையும் நடத்தினர்.

இந்நிலையில், சி.ஐ.டி.யு. ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து சி.ஐ.டி.யு. பொதுச்செயலாளர் சீனுவாசன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை ஐகோர்ட் எங்கள் சங்கத்தின் கருத்துகளை கவனமாக கேட்டு போக்குவரத்துத்துறை பிறப்பித்த கட்டண உயர்வுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. வாகனம் வைத்திருக்கும் அனைவருக்கும் இந்த தடை உத்தரவு பலனளிக்கும்.

இந்த உத்தரவின் மூலம் ஆட்டோக்களுக்கான தகுதி சான்றிதழ் கட்டணம் ரூ.4 ஆயிரத்து 400 என்பது ரூ.700 ஆகவும், வேன், டெம்போ, டாக்சி போன்றவற்றுக்கு ரூ.8 ஆயிரத்து 700 என்பது ரூ.700 ஆகவும், பஸ், லாரி, டாரஸ் போன்ற கனரக வாகனங்களுக்கு ரூ.12 ஆயிரம் என்பது ரூ.1,600 எனவும் குறையும். மேலும், ஒருநாள் காலதாமத அபராதம் ரூ.50 என்பது அனைத்து வாகனங்களுக்கும் ரத்தாகும்” என்று கூறியுள்ளார்.