பொதுமக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் காணும் பொங்கலைக் கொண்டாடுவதற்கு சென்னையில் 15 ஆயிரம் காவலர்கள் மூலம் சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காணும் பொங்கலன்று பொதுமக்கள் கடலில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், மெரினா கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் கடலில் குளிக்க அனுமதிக்காமல் காவல் ஆளிநர்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.
பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் ஒரு தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் நான்கு தற்காலிக காவல் கண்காணிப்பு உயர் கோபுரங்கள் அமைத்துக் கண்காணிக்கப்பட உள்ளது.
கடற்கரைக்குப் பெற்றோருடன் வரும் குழந்தைகள் கூட்ட நெரிசலில் காணாமல் போனால் உடனடியாக மீட்பதற்காகக் குழந்தைகளுக்குக் காவல் அடையாள அட்டை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரை மணற்பரப்பில் 4 டிரோன் கேமராக்களும், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை மணற்பரப்பில் 2 டிரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு சமூக விரோதிகள் மற்றும் குற்ற நிகழ்வுகள் கண்காணிக்கப்பட உள்ளது.
சிறப்பு வாகன தணிக்கை குழுக்கள் மற்றும் 25 சாலை பாதுகாப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகன பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
இதேபோன்று கிண்டி சிறுவர் பூங்கா, தீவுத்திடல், வணிக வளாகங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
newstm.in