கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புண்ணியம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வந்த நபர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என கருதி தேடிப் பார்த்தனர். ஆனால் அந்த இடத்தில் யாரும் இல்லாததால் தண்ணீரில் அவர் அடித்துச் செல்லப்பட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து பொதுமக்கள் சேர்ந்து விசாரித்ததில், அந்த மோட்டார் சைக்கிள் மாத்தூர்கோணம் பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதனையடுத்து வாலிபரின் உறவினர்களை தொடர்பு கொண்டு விசாரித்த போது, அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்தனர்.
பின்னர் அவரது நண்பர்கள் சிலரிடம் விசாரித்த போது, நேற்று முன்தினம் அந்த வாலிபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். புண்ணியம் பகுதியில் சென்றபோது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்ந்து விட்டது. இதனால் அந்த வழியாக வந்த சிலரிடம் பெட்ரோல் வாங்க பணம் தருமாறு கேட்டுள்ளார். யாரும் அவருக்கு பணம் கொடுக்கவில்லை.
இதனையடுத்து அவரிடமும் பணம் இல்லாததால் மன உளைச்சலில் ‘பெட்ரோல் இல்லாத வண்டி எதற்கு’ என புலம்பிக் கொண்டு மோட்டார் சைக்கிளை சாலையிலிருந்து கால்வாய்க்குள் தள்ளி விட்டு எதுவும் நடக்காதது போல வீட்டிற்கு வந்து தூங்கியது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.