சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் திருவள்ளுவருக்கு 133 அடி உயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை உப்புக் காற்றின் பாதிப்பில் இருந்து சேதமடைவதை தடுப்பதற்காக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.
அதன்படி, திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி ரூ.1 கோடி செலவில் கடந்த ஜூன் மாதம் 6-ம் தேதி தொடங்கியது. அப்போது சிலையின் இணைப்பு பகுதிகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்யும் விதமாக சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் ஆகியவை கொண்ட கலவை பூசும் பணி நடைபெற்றது.

அதன் பிறகு காகித கூழ் கலவை சிலை மீது ஒட்டப்பட்டு சிலையில் படிந்துள்ள உப்பை அகற்றும் பணி நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து, ஜெர்மன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘வாக்கர்’ எனப்படும் ரசாயன கலவை பூசப்பட்டது. தற்போது ரசாயன கலவை பூசும் பணி நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து திருவள்ளுவர் சிலை புதுப்பொலிவுடன் காட்சிஅளிக்கிறது.
இதைத்தொடர்ந்து, 6 மாதங்களுக்கு பிறகு இன்னும் ஒரு சில நாட்களில் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்படுகிறது. இதையடுத்து மீண்டும் திருவள்ளுவர் சிலையை நேரில் சென்று பார்வையிட சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள். இதற்காக திருவள்ளுவர் சிலை வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.