
குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இயக்குவதற்கு தடை விதித்து பழனி நகராட்சி ஆணையர் கமலா உத்தரவிட்டுள்ளார்.
உலகப் பிரசித்திப் பெற்ற பழனி முருகன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (ஜனவரி 27, 2023) குடமுழுக்கு விழா நடைபெற இருக்கிறது. குடமுழுக்கு விழாவில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து இணைய வழியாக ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர்.
அதில் முதற்கட்டமாக 2,000 பேருக்கு அனுமதிக்கான குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அடிவாரத்தில் உள்ள தேவஸ்தான அலுவலகத்தில் குறுஞ்செய்தியை காண்பித்து அனுமதி அட்டையை பெற்றுக் கொண்டுள்ளனர்.

மொத்தமாக 6000 பேர் குடமுழுக்கு விழாவினை பார்வையிட உள்ளனர். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 2500 போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக கும்பாபிஷேகத்தை காண ஆங்காங்கே 16 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
குடமுழுக்கு நடைபெறுவதால் நாளை திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. அந்த நாளை ஈடுசெய்யும் வகையில் பிப்ரவரி 25ஆம் தேதி பணி நாளாக இருக்கும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குடமுழுக்கு விழாவினை முன்னிட்டு அனைத்து வகையான இறைச்சி கடைகளும் இயக்குவதற்கு தடை விதித்து பழனி நகராட்சி ஆணையர் கமலா உத்தரவிட்டுள்ளார்.
newstm.in