சர்வதேச விமான கண்காட்சி நடைபெற உள்ளதால் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை பெங்களூருவில் அசைவ உணவுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட விமான கண்காட்சியானது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பெங்களூரு எலகங்கா பகுதியில் உள்ள விமான படை தளத்தில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் ‘ஏரோ இந்தியா’ என்ற பெயரில் இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த விமான நிறுவனங்கள், ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இக்கண்காட்சியில் கலந்து கொள்ள உள்ளன. விமான கண்காட்சியையொட்டி போர் விமானங்களின் சாகச நிகழச்சிகளும் நடைபெறும்.
இந்த ஆண்டு கண்காட்சி பிப்ரவரி 13 தொடங்கி 17 வரை நடைபெறவுள்ளது. கண்காட்சியில் மொத்தம் 731 நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு நடைபெறும் விமானக் கண்காட்சியை பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார். இதனால் எந்த அசம்பாவிதங்களும், இடையூறுகளும் ஏற்படாதவகையில் பல முக்கிய விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
அந்தவகையில் பெங்களூரு எலகங்கா விமான படை தளத்தில் இருந்து சுமார் 10 கி.மீட்டர் சுற்றளவிற்கு உள்ள இடங்களில் இறைச்சி உள்ளிட்ட அசைவ உணவு பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடை உத்தரவு ஜனவரி 30ஆம் தேதியே தொடங்கப்பட்டு நடந்து முடிந்த பின்பும் 3 நாட்களுக்கு அமலில் இருக்கும். இந்த தடையை மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் மீதமாகும் உணவு பொருட்கள் பொது இடங்களில் கொட்டப்படுவதால், அதனை உண்ண பறவைகள் அதிக அளவில் வருகிறது.
இதனால், விமான கண்காட்சியின் போது அந்த பறவை விமானத்துடன் மோதுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. எனவே அசைவ உணவகங்களுக்கு தடை விதிக்கப்பட்ட விளக்க அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
newstm.in