
நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள பதான் திரைப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. 4 நாட்களில் உலகம் முழுவதும் 400 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பதான் படத்தை சர்ச்சை சுற்றிக் கொண்ட போதிலும் அதையெல்லாம் கடந்து தற்போது வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கிறது. பதான் திரைப்படம் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 8,000 திரைகளில் வெளியிடப்பட்டது.
முதல் மூன்று நாள் வசூல் அடிப்படையில் கேஜிஎஃப் 2 மற்றும் பாகுபலி 2 பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை பதான் முறியடித்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது ஷாருக்கானின் பதான்.

கடந்த சில வருடங்களாக தொடர் தோல்விகளால் சரிவிலிருந்த பாலிவுட் திரையுலகை மீட்கும் விதமாக ‘பதான்’ அமைந்துள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். இந்நிலையில், படம் வெளியாகி 4 நாட்களில் உலக அளவில் ரூ.400 கோடி வசூலை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய அளவில் இந்தப் படம் 4 நாட்களில் ரூ.200 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஷாருக்கான் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
newstm.in