இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படுகிறது. வாக்காளர்களாக தகுதியை கொண்ட 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் கொடுத்து சேரலாம். அந்த வகையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கி வருகிறது. இதில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டையில் வாக்காளர் பெயர், முகவரி விவரம் அடங்கியிருக்கும்.
இந்த நிலையில், புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டைகள் அச்சிடப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.வாக்காளர் அடையாள அட்டையில் ஏற்கெனவே மூன்று விதமான பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. க்யூஆர் கோடு, ஹோலோகிராம் போன்ற தொழில்நுட்பங்கள் ஏற்கெனவே அதில் இடம் பெற்றுள்ளன. இப்போது, போலி அட்டைகளை உருவாக்க முடியாதபடி கூடுதலாக 3 பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் நடக்கவுள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முதற்கட்டமாக புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பழைய வாக்காளர் அட்டையில் மாற்றம் எதுவும் செய்தால் புதிய அம்சங்கள் கொண்ட புதிய அட்டை வழங்கப்படும் என சாகு தெரிவித்துள்ளார். மேலும் பழைய அட்டையை வைத்திருப்பவர்கள் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாற்றி புதிய அட்டை பெறலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கோஸ்ட் இமேஜ்’ எனப்படும் புதிய அம்சம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு , புதிய வாக்காளர் அட்டையில் QR கோடு வசதியுடன் மிகச்சிறிய எழுத்து இடம்பெறும். பாதுகாப்பு அம்சங்கள் அடங்கிய புதிய வடிவிலான வாக்காளர் அடையாள அட்டை வெளியிடப்பட்டுள்ளது. அடையாள அட்டை முன்புறம் வாக்காளரின் புகைப்படமும், அவரது நெகட்டிவ் இமேஜ் போன்ற படமும் இடம்பெறும். அட்டைக்கு வெளியே ஒட்டப்பட்ட ஹோலோகிராம் இனி அட்டைக்குள் இடம்பெறும் என்றார்.