இன்ஸ்டாகிராம் மூலம் பழகி திருமணமான பெண்ணை கடத்தி அவரை ரூ.2 லட்சத்திற்கு விற்க சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் திருமணமான 23 வயது பெண் ஒருவர் அண்மையில் திடீரென காணாமல் போனார். இதனையடுத்து குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அப்பெண் கடத்தப்பட்டது தெரியவந்தது. சில மாதங்களுக்கு முன், அப்பெண்ணுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
பெண்ணிடம் அன்பாக பேசி நம்பிக்கையை பெற்ற அந்த நபர், தனக்கு பெரிய இடத்தில் தொடர்பு உள்ளது என்றும், காவல்துறையில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறியுள்ளார்.
அவரின் பேச்சை நம்பி அந்த பெண்ணும் சம்மதம் தெரிவித்துள்ளார். வேலைத் தொடர்பாக நேரில் பேச வேண்டும் எனக் கூறி பெண்ணை அந்த நபர் வெளியே அழைத்துள்ளார்.
பெண் வெளியே சென்றபோது, நான்கு பேருடன் சேர்ந்து அந்த நபர் ராஜஸ்தானுக்கு கடத்தி சென்றார். பின்னர் ரூ.2 லட்சத்திற்கு அந்த பெண்ணை விற்றுள்ளனர். அங்கு அந்த நபருடன் கட்டாய திருமணம் செய்து வைத்தனர்.
இதனிடையே, தீவிர விசாரணை மேற்கொண்ட போலீஸார், பெண்ணின் இருப்பிடம் தெரிந்து அவரை மீட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மட்டும் பிடிபட்ட நிலையில், அவரின் கூட்டாளிகள் 4 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
newstm.in