
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் படித்து வருபவர்கள் நிக்கில் மற்றும் ஸ்ரேயா. இவர்கள் இருவரும் தங்களது மோட்டர் பைக்கில் கேரள மாநிலம் கொச்சினுக்கு சென்றுள்ளனர். அப்போது கொச்சி பனங்காட்டில் உள்ள ஒரு செல்லப்பிராணிகள் கடைக்கு சென்று தங்களது பூனையை விற்கவேண்டும் என்று கூறியுள்ளனர்.
அது குறித்து விசாரித்துவிட்டு அங்குள்ள செல்லப்பிராணிகளை வரிசையாக பார்த்துவிட்டு சிறிது நேரத்தில் கடையை விட்டு கிளம்பியுள்ளனர். அவர்கள் சென்றபின்னர் கடையின் உரிமையாளர் பஷீத் தாங்கள் வைத்திருந்த 3 ஷிஹ் சூ நாய்களில் ஒன்றை காணவில்லை என்பதை கவனித்துள்ளார். உடனே கடையில் இருந்த சிசிடிவி காட்சிகளை சரிபார்த்துள்ளார்.

அப்போது நிக்கில் மற்றும் ஸ்ரேயா செல்லப்பிராணிகளை பார்க்கும்போது பிறந்து 45 நாட்களே ஆன ஒரு ஷிஹ் சூ நாயை கூண்டை விட்டு வெளியேற்றி நிக்கில் ஹெல்மெட்டுக்குள் போட்டு கொண்டு திருடிச் சென்ற காட்சி கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் பஷீத் 25 ஆயிரம் மதிப்புள்ள ஷிஹ் சூ நாயை திருடிய இளைஞர்கள் மீது போலீசில் புகார் அளித்தார். இளைஞர்களின் முகம் சரியாக பதிவானாலும் போலீஸ் இந்த வழக்கில் மெத்தனம் காட்டி வந்தது. ஆனால் இதே போன்று கேரளாவின் மற்றொரு கடையில் நடந்த சம்பவத்தால் குற்றவாளிகள் சிக்கினர்.

இதே இளைஞர்கள் மற்றொரு செல்லப்பிராணிகள் கடையில் நாய்களுக்கான உணவுகளை திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கே சிக்கிக்கொண்டனர். இதனால் பொருளுக்கான விலையை யுபிஐ மூலம் செலுத்தியுள்ளனர். இதை அறிந்த போலீஸ் யுபிஐ ஐடியை வைத்து அவர்களது இருப்பிடத்தை தேட ஆரம்பித்தனர். அப்போது அவர்கள் உடுப்பியை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் கேரளா போலீஸ் கேரளாவில் இருந்து உடுப்பி சென்று அந்த 2 இளைஞர்களை கைது செய்ததது. அதோடு அவர்களிடம் இருந்த 25 ஆயிரம் மதிப்புள்ள ஷிஹ் சூ நாயை மீட்டு அதன் உரிமையாளர் பஷீத்திடம் ஒப்படைத்தனர்.