
பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் இறப்பு குறித்து அவரது வீட்டில் பணி புரியும் பணிப்பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
பிரபல பின்னணி திரைப்படப்பாடகி வாணி ஜெயராம் இன்று காலமானார். இவர், 1971இல் இந்தியில் வெளியான ‘குட்டி’ என்ற படத்தின் மூலம் பாடகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 19 மொழிகளில் பாடியுள்ளார்.
தமிழில் முதன்முதலாக 1974ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி ௭ன்ற திரைப்படத்தில் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், கவிஞர் வாலி எழுத்தில் வெளியான ‘மல்லிகை ௭ன் மன்னன் மயங்கும்..’ என்ற பாடலை பாடி இவர் பிரபலமானார். தொடர்ந்து மூன்று முறை சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதுகளைப் பெற்றுள்ள வாணி ஜெயராம், தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, உள்ளிட்ட மாநில விருதுகளையும் பெற்றுள்ளார்.

மேலும் கலையுலகில் உயரிய விருதாக கருதப்படும் பத்ம விருதையும் இந்தாண்டு மத்திய அரசு இவருக்கு அறிவித்தது. பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டு 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் அவர் நம்மை விட்டு மறைந்துள்ளார்.
இவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் வாணி ஜெயராம் இறப்பு குறித்து அவரது வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் மலர்க்கொடி வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்படி, அவர் இன்று காலை 10.45 மணிக்கு சென்று வீட்டின் காலிங் பெல்லை அடித்துள்ளார்.

நான்கு ஐந்து முறை பெல் அடித்தும் கதவு திறக்கப்படவில்லை. போன் அடித்தும் எடுக்கவில்லை. அதனால் சந்தேகம் எழவே, கீழ் வீட்டுக்காரரிடம் கூறியுள்ளார். பிறகு, காவல் துறையினருக்கு தகவல் கொடுத்து, அவர்கள் வந்ததும் உள்ளே சென்று பார்த்தபோது வாணி ஜெயராம் படுக்கை அறையில் கீழே விழுந்து கிடந்தார் என்று தெரிவித்துள்ளார்.
அவரது நெற்றியில் அடிப்பட்டிருந்தது என்று கூறியுள்ள பணிப்பெண், 10 வருடங்களாக அங்கு பணி செய்து வருவதாகவும், அவருக்கு உடல்நிலை நன்றாகத்தான் இருந்தது, எந்தப் பிரச்னையுமில்லை இல்லை என்று கூறியுள்ளார். இதனிடையே, வாணி ஜெயராமின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நுங்கம்பாக்கம் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

newstm.in