சீனாவுக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சீனாவை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் சூதாட்ட செயலிகளும் கடன் அளிக்கும் செயலிகளும் செயல்பட்டு வருகின்றன. கடன் தேவையிருக்கும் மக்களை கடன் பெற வைத்து பின்னர் அதிக வட்டியை செலுத்த நிர்பந்திப்பதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியவர்களால் வட்டி செலுத்த இயலாத பட்சத்தில் அவர்களை மிரட்டுவதாகவும், அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிட போவதாக எச்சரிக்கை விடுப்பதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதன் காரணமாக தெலங்கானா, ஆந்திரா, ஒடிஷா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் 6 மாதங்களுக்கு முன்பு, 28 சீன கடன் வழங்கும் செயலிகளை மத்திய உள்துறை கண்காணிக்க தொடங்கியது.
அதனை தொடர்ந்து 138 சூதாட்ட செயலிகளையும் 94 கடன் வழங்கும் செயலிகளையும் தடை செய்ய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்திற்கு உள்துறை பரிந்துரை செய்துள்ளது. அதன் அடிப்படையில் செயலிகள் தடை செய்யப்படுகின்றன.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளதால் இச்செயலிகளை விளப்பரப்படுத்துவது சட்ட விரோதம் என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது.
newstm.in