சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் நடைமுறை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இது குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது, இது முக்கியமான விவகாரம். இதில் சங்கடமான நிலையை எடுக்க வேண்டிய சூழலை உருவாக்கி விடாதீர்கள் என்று நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட் ரமணி, கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளின் பெயர்களுக்கு ஒன்றிய அரசு விரைவில் ஒப்புதல் அளிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி சுப்ரீம் கோர்ட்டுக்கு கொலிஜீயம் பரிந்துரைத்த நீதிபதிகளுக்கு ஒன்றிய அரசு நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ தனது டுவிட்டரில்,ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மித்தல், பாட்னா ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கரோல், மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதி பி.வி.சஞ்சய் குமார், பாட்னா ஐகோர்ட் நீதிபதி அஹ்சானுதீன் அமானுல்லா, அலாகாபாத் ஐகோர்ட் நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இவர்கள் 5 பேருக்கும் இன்று காலை 10.30 மணிக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் பதவிபிரமாணம் செய்து வைக்கிறார். இதனால் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளின் எண்ணிக்கை 32 ஆக அதிகரிக்கும்.