கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நெருங்கி வருகிறது. வருகிற மே முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று (திங்கட்கிழமை) கர்நாடகம் வருகிறார். அவர் துமகூருவில் எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.இங்கு முதல்கட்டமாக இலகுரக ஹெலிகாப்டர்கள் உற்பத்தி செய்யப்படும்.
இந்த விழாவில் ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். பெங்களூருவில் இருந்து 70 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள இந்த ஹெலிகாப்டர் தொழிற்சாலை அமைப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு நாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொழிற்சாலையில் 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை கொண்ட ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரூ.4 லட்சம் கோடி வர்த்தகம் நடைபெறும்.
அதற்கு முன்னதாக பெங்களூரு துமகூரு ரோட்டில் உள்ள சர்வதேச கண்காட்சி அரங்கத்தில் நடைபெறும் இந்திய மின்சார வார விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அதை முடித்து கொண்டு அவர் ஹெலிகாப்டரில் துமகூருவுக்கு செல்கிறார்.
இதைெயாட்டி பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பெங்களூரு வருகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு பெங்களூரு மற்றும் துமகூருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.