வட இந்தியாவில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்துவது வழக்கம். இப்படியான கொண்டாட்டங்கள் திருமண நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது அரசியல் நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது. சில நேரங்களில் இந்த கொண்டாட்டம் விபரீதத்தில் முடிந்து விடுகிறது.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம், புலந்த்சாகர் மாவட்டம் பிபிநகரில் நேற்று திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியின் போது விஷால் என்ற நபர் தான் வைத்திருந்த உரிமம்பெற்ற துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டபோது தவறுதலாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த சரத் (24) மற்றும் ராஜ்குமார் ஆகிய 2 பேர் மீது குண்டு பாய்ந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் உடனே இருவரையும் மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த சரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொரு நபருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு இளைஞர் உயிரிழக்க காரணமான விஷாலை கைது செய்தனர்.