மத்திய அரசு எய்ம்ஸ் பணிகளை தொடங்காவிட்டால் மதுரை மக்கள் அனைவரும் செங்கலை எடுப்பார்கள்

மதுரையில் நேற்று தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் 72 ஆயிரத்து 92 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ. 180 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது,மதுரையின் வளர்ச்சியும், மக்களின் வாழ்வாதாரமும் உயர்ந்து கொண்டே போவது தி.மு.க. ஆட்சியில்தான். தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் கூறிய 75 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்.

ஆனால் எதிர்க்கட்சிகள் வாட்ஸ்ஆப் மூலம் தவறான தகவலை பரப்புகின்றனர். தி.மு.க. ஆட்சியின் சாதனையை வெளியில் சொல்லாததுதான் எங்களது பலவீனம்.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டக் கோரி கடந்த தேர்தலின்போது ஒற்றை செங்கலை எடுத்தேன். ஆனால் இன்னும் கட்டவில்லை. அதற்குப் பின் கலைஞர் நூலகத்திற்கு அடிக்கல் நாட்டி பணிகள் முடிந்து விரைவில் திறக்கப்படவுள்ளன. இதிலிருந்து மக்கள் நலனில் அக்கறையோடு செயல்படும் அரசுக்கும், ஒன்றிய அரசுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் பார்க்கலாம்.

வரும் பாராளுமன்றத் தேர்தலுக்குள் மத்திய அரசு நிதி ஒதுக்கி எய்ம்ஸ் பணிகளை தொடங்காவிட்டால் நான் செங்கலை எடுப்பதற்குமுன் மதுரை மக்கள் அனைவரும் செங்கலை எடுப்பார்கள்.

தேர்தலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்களோடுதான் தி.மு.க. இருக்கும். கொரோனா காலத்திலும் உங்களோடு உடனிருந்தோம். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எப்போதும் உங்களுடன் இருக்கும் தி.மு.க. அரசுக்கு எப்போதும் நீங்கள் ஆதரவாக இருக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் உதயநிதி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், அமைச்சர்கள் பி.மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.