சாட்ஜிபிடியுடனான தொழில் போட்டியால் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சந்தை மதிப்பு ஒரே நாளில் சுமார் 100 பில்லியன் டாலர் அதாவது 8 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
கணினி அறிவியலின் எதிர்காலம் என்று கருதப்படும் செயற்கை நுண்ணறிவு என்பது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களைப்போல சிந்திக்க வைக்கும் தொழில்நுட்பம். ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க், சாம் அல்ட்மேன் என்பவருடன் இணைந்து சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவு சாட் பாட்டை 2015இல் தொடங்கினார்.
அந்த நிறுவனத்தின் பெயர் ஓபன் ஏஐ. இந்த நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்ட சாட்ஜிபிடி, நாம் எதை தேடுகிறோமோ அது குறித்து, தானாக செயற்கை நுண்ணறிவு மூலமாக ஆராய்ந்து தேவையான மற்றும் துல்லியமான தகவல்களை கொடுக்கும்.
கட்டுரை, மின்னஞ்சல், கதை என எதை கேட்டாலும், எழுதி கொடுக்கும் திறன் சாட்ஜிபிடி-க்கு உண்டு. சாட்ஜிபிடி அறிமுகமான இரண்டே மாதங்களில் பயனாளர்களின் எண்ணிக்கை 10 கோடியை கடந்தது. அதனால், கூகுள் பயனாளர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைய வாய்ப்பு ஏற்பட்டது.
சுதாரித்துக் கொண்ட கூகுள் போட்டியாகக் பார்ட் (BARD) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. அண்மையில் பார்ட்-ஐ விளம்பரப்படுத்த கூகுள் ட்விட்டரில் ஒரு விளம்பரத்தை வெளியிட்டது.
அதில், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் கண்டுபிடிப்புகள் பற்றி ஒன்பது வயது குழந்தையுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று கேட்கப்பட்டது. இதற்கு பார்ட், தவறான தகவலை பதிலாக அளித்தது. ட்விட்டர் பயனர்களால் இந்த தவறு சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுனர்களும், நெட்டிசன்களும் கடுமையாக விமர்சனம் செய்தனர். அதன் எதிரொலியாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் பங்குகள் சரிந்தன.
ஒரே நாளில் 100 பில்லியன் டாலர் அளவிலான சந்தை மதிப்பீட்டை இழந்துள்ளது. அதாவது இந்திய ரூபாயில் சுமார் 8 லட்சம் கோடி. சாட்ஜிபிடி அறிமுகத்தின் போதும் இதேபோன்ற பிரச்னைகள் இருந்தது. ஆனால் இது மைக்ரோசாப்ட்-ஐ பாதிக்கவில்லை.
ஓபன் ஏஐ நிறுவனத்தில் மைக்ரோசாப்ட் முதலீடு மட்டுமே செய்துள்ளது. ஆனால் பார்ட் கூகுளின் சொந்த தயாரிப்பு என்பதால் பாதிப்பு அதிகமாக உள்ளது.
newstm.in