
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் ரூ 5 கோடி மதிப்பீட்டில் தலா 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 2 செயல்முறை கிடங்குகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து, வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கல் நாட்டினார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது;
தமிழகத்தில் திறந்த வெளியில் செயல்பட்டு வரும் 106 நெல் கிடங்குகளில், நெல் மணிகள் சேதமடைவதை தடுக்க முதற்கட்டமாக ரூ.235 கோடி மதிப்பீட்டில், 2.86 லட்சம் டன் நெல் இருப்பு வைக்கும் வகையில் மேற் கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கப்பட உள்ளது.தமிழகத்தில் உள்ள, 12 தாலுக்கா பகுதிகளில், தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் மூலமாக உணவுப் பொருட்கள் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்படுகிறது.
இதையொட்டி, நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ரூ. 5 கோடி மதிப்பில், 1,000 மெட்ரிக் டன் கொள்ளளவு உள்ள கிடங்கு அமைக்க முதல்வர் அடிக்கல் நாட்டியுள்ளார்.இதன் மூலம் ரேசன் பொருட்கள் விநியோகம் செய்வதற்கு வசதி ஏற்படும்.

மேலும், ரேசன் கடைகளில் பல இடங்களில் பயோ மெட்ரிக் மூலம் ரேகை வைத்து பொருட்கள் பெறுவதில் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளன.இதற்காக வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் மாற்று நபர்கள் மூலம் வந்து பொருட்கள் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.இதற்கான விண்ணப்பங்களை ரேசன் கடைகளில் பெற்று பூர்த்தி செய்து, அதிகாரிகளின் ஒப்புதல் பெற்று வழங்கினால் அவ்வாறு பொருட்களை பெறலாம்.ரேசன் கடைகளில், விரைவில் பயோ மெட்ரிக் முறையோடு, கண் கருவிழிகளை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

தமிழக முதல்வர், முன்னோடி திட்டமாக தர்மபுரி, நீலகிரி மாவட்டங்களில் ரேசன் கடைகளில் சிறு தானியமான ராகி வழங்க உத்தரவிட்டுள்ளார். இதற்காக தமிழக அரசு மூலம் ஒரு கிலோ ரூ. 35.40 வீதம் , கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில், ராகி நேரடி கொள்முதல் செய்யப்படுகிறது என்று கூறினார்.