
திருவண்ணாமலையில் ஒரே இரவில் அடுத்தடுத்து 4 இடங்களில் ஏடிஎம்களை உடைத்து கொள்ளையர்கள் பணத்தை திருடிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போளூரில் ரூ.19.50 லட்சம், பணிமனை அருகே உள்ளே ஏடிஎம்மில் ரூ.31 லட்சம், மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஏடிஎம்மில் ரூ.20 லட்சம், கலசப்பாக்கத்தில் ரூ.2.50 லட்சம் கொள்ளை என ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்ளையை நிகழ்த்தியது ஒரே கும்பலா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொள்ளையர்களை பிடிக்க தீவிர வாகன தணிக்கை மற்றும் தனியார் விடுதிகளில் சோதனை நடத்த தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். இன்று காலை முதலே திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களிலும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். மேலும், ஏடிஎம் கொள்ளை சம்பவம் நடந்த பகுதி, மாவட்ட எல்லைகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுடன் இணைந்து போலீசார் மாநில எல்லைகள் மற்றும் சுங்க சாவடிகளில் தீவிர வாகன சோதனை செய்யவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மேலும், கொள்ளையர்கள் தமிழகத்திலேயே தங்கி உள்ளார்களா என்பதை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் விடுதிகளிலும் தீவிர சோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.