உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் மாவட்டத்தின் பஹாத்ராபாத் என்ற பகுதியில் நேற்று இரவு திருமண கொண்டாட்ட ஊர்வலம் நடைபெற்றது. பொதுவாக வட மாநில திருமணங்களில் பாராத் எனப்படும் நீண்ட திருமண ஊர்வலம் சாலைகளில் நடைபெறுவது வழக்கம். மணமக்களின் உறவினர்கள் நண்பர்கள் மேள, தாள வாத்தியங்கள் முழங்க சாலைகளில் நடனமாடிக் கொண்டு ஊர்வலம் வருவார்கள்.
அவ்வாறு நேற்று முன்தினம் இரவு வேலையில் ஹரித்துவாரின் பஹாத்ராபாத் பகுதியில் வெகு விமரிசையாக திருமண ஊர்வலம் நடைபெற்றது. பலரும் ஜாலியாக சாலையில் ஆடிப்பாடி சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென ஒரு ஸ்கார்பியோ கார் ஒன்று ஊர்வலத்திற்குள் நுழைந்தது. மெய்மறந்து ஆடிக்கொண்டிருந்தவர்கள் மீது இந்த கார் சடாரென ஏறிச் சென்றது.
இந்த கோர விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இந்த விபத்து சம்பவம் அப்படியே வீடியோவாக பதிவாகி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
காரை ஓட்டி விபத்தை ஏற்படுதத்திய ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. திருமண நிகழ்வை சோக நிகழ்வாக மாற்றிய ஓட்டுநரை பிடித்து அங்கிருந்த மக்கள் ஆத்திரத்தில் அடித்துள்ளனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.