மகா சிவராத்திரி விழாவையொட்டி சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு செல்ல மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு 4 நாட்கள் அனுமதி வழங்கப்படும்.
குறிப்பாக ஆடி, தை அமாவாசை மகாளய அமாவாசை நாட்களில் தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் சதுரகிரிக்கு வருவார்கள். சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படும் மகா சிவராத்திரி அன்றும் திரளான பக்தர்கள் வருகை தருவதுண்டு.
இந்த நிலையில், வரும் 18ஆம் தேதி சிவராத்திரி விழா என்பதால் சதுரகிரி மலைக்கு செல்ல வருகிற பிப்ரவரி 18 முதல் 21ஆம் தேதி வரை விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
காலை 7 மணி முதல் நண்பகல் 11 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மலையேறும் பக்தர்கள் பிளாஸ்டிக் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்லக்கூடாது என அறிவுறுத்தப்படுகின்றனர்.
இரவில் கோவிலில் தங்க அனுமதி இல்லை, 60 வயதுக்கு மேற்பட்டோர் செல்ல தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறை விதித்துள்ளது. கூட்டம் அதிகமாக வரும் என்பதால் மாவட்ட நிர்வாகம் தேவையான முன்னேற்பாடு வசதிகளை செய்து வருகிறது.
newstm.in