கோவையில் கும்பல் ஒன்று பொதுமக்கள் மத்தியில் ஒரு இளைஞரை கொலை செய்துவிட்டு கூலாக நடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதுரை ஆரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்தி என்கிற சத்யபாண்டி (31) கோவை விளாங்குறிச்சியில் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றிவந்தார். இவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள கடையில் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது ஒரு கும்பல் அவரை சுற்றி வளைத்தது. அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய சக்தியை அந்த கும்பல் விரட்டிப்பிடித்து மக்கள் முன்னிலையிலேயே துப்பாக்கியால் சுட்டும், சரமாரியாக வெட்டியும் கொன்றனர். அதன்பிறகு கும்பலை சேர்ந்த இளைஞர்கள் அங்கிருந்து கூலாக தப்பிச் சென்றனர்.
தகவலறிந்து வந்த போலீஸார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கடந்த 2020ஆம் ஆண்டு, கோவை ராம்நகர் பகுதியில் இந்து முன்னணியைச் சேர்ந்த பிஜூ என்பவர் கொலைசெய்யப்பட்டார். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட 10 பேரில் சக்தியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையிலிருந்து ஜாமீனில் வந்தவரை, அந்தச் சம்பவத்துக்கு பழி தீர்க்கும்விதமாக இந்தக் கொலைச் சம்பவம் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியிருக்கிறது. தனிப்படை போலீஸார் கொலையாளிகளைத் தேடிவருகின்றனர்.
newstm.in