சூடுபிடிக்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்..!! அடுத்தடுத்து களமிறங்கும் முக்கிய தலைவர்கள்..!!

ஈரோடு தொகுதி தேர்தலுக்கு இன்னும் 14 நாட்களே உள்ள நிலையில் பிரசாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், அ.தி.மு.க, தே.மு.தி.க, நாம் தமிழர் கட்சி உள்பட 77 பேர் போட்டியிடுகின்றனர். இதில் 4 பெண் வேட்பாளர்கள் அடங்குவார்கள்.

இதனால் இந்த தேர்தலில் 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. காலை 6 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சித்தலைவர்கள் காலை 10 மணி வரை தீவிர பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். பின்னர் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேர்தல் பணிமனைகளில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனையடுத்து மதிய உணவுக்கு பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்து மீண்டும் மாலை 4 மணி முதல் பிரசாரத்தை தொடங்கி இரவு 10 மணி வரை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வரும் முதல் இடைத்தேர்தல் என்பதால் இதில் வெற்றி பெற வேண்டும். அதுவும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற வகையில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், காந்தி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, செந்தில் பாலாஜி, பெரியசாமி, கே.என்.நேரு, எ.வ.வேலு என 30-க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 24, 25-ந் தேதி ஆகிய 2 நாட்கள் ஈரோடு கிழக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகிறார். இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோரும் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனும் வரும் 19-ந் தேதி பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதேபோல் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.வி.ராமலிங்கம், கருப்பணன், விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, செல்லூர் ராஜூ உள்பட 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 2 கட்டமாக 5 நாட்கள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

இதேபோல் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை 2 நாள் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே.வாசன் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். தே.மு.தி.க. வேட்பாளரை ஆதரித்து பிரேமலதா பிரசாரம் மேற்கொள்கிறார். நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை மாலை பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அதை தொடர்ந்து 2 நாட்கள் பிரசாரம் மேற்கொள்கிறார். தொடர்ந்து அரசியல் கட்சித்தலைவர்கள், வெளி மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முற்றுகையிட்டு பிரசாரம் மேற்கொண்டு வருவதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் களை கட்டியுள்ளது.

வீதிவீதியாக சென்று தலைவர்கள், நிர்வாகிகள் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சுயேட்சை வேட்பாளர்களும் நேற்று முதல் பிரசார களத்தில் இறங்கியுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.