ராணுவ வீரரின் மனைவியை வீட்டின் உரிமையாளர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. கடுமையான சட்டங்கள் இருந்தாலும் கூட குற்றங்களை கட்டுப்படுத்த முடியாத சூழலே நிலவுகிறது. அந்த வகையில், எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரரின் மனைவிக்கு வீட்டில் பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் அளவுக்கு சோக சம்பவம் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் ராணுவ வீரர் ஒருவரின் மனைவி வாடகை வீட்டில் வசித்து வருகிறார். ராணுவ வீரர் பணியில் இருப்பதால் அப்பெண் மட்டுமே வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், வீட்டின் உரிமையாளர் சோகன் சிங், பெண்ணின் கணவர் விபத்தில் சிக்கிவிட்டதாக கூறியுள்ளார்.
மேலும் விவரங்களை அறிய தன் வீட்டிற்கு வருமாறு வீட்டின் உரிமையாளர் கூறினார். அதிர்ச்சியடைந்த அந்த பெண், சோகன் சிங்கின் வீட்டிற்கு சென்றார். அங்கு அந்த பெண்ணை வீட்டின் உரிமையாளர் சோகன் சிங் பல முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது குறித்து யாரிடமாவது தெரிவித்தால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். ஆனாலும் அந்த பெண் அஞ்சாமல் தனக்கு நடந்த கொடூரம் குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in