
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வங்காளதேசமும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், அயர்லாந்தும் இடம் பெற்றுள்ளன.
இந்த கிரிக்கெட் திருவிழாவில் இன்று கேப்டவுனில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் இந்திய அணி, வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்கிறது.
வெஸ்ட்இண்டீஸ் வெற்றி கணக்கை தொடங்கவும், இந்திய அணி தொடர்ந்து 2-வது வெற்றியை ருசிக்கவும் வரிந்து கட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இவ்விரு அணிகளும் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இதுவரை 20 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 12-ல் இந்தியாவும், 8-ல் வெஸ்ட்இண்டீசும் வென்று இருக்கின்றன. 20 ஓவர் உலகக் கோப்பையில் 2 முறை சந்தித்ததில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளதும் இதில் அடங்கும்.