இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தற்போது ஓய்வில் இருந்து வருகிறார். நியூஸிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் அணியை தலைமை தாங்கி வெற்றியும் பெற்றார் ஹர்திக் பாண்டியா. இவரது தலைமையில் இந்திய அணி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறது.
இந்நிலையில் ஹர்திக் பாண்டியா தான் மீண்டும் தனது மனைவியை திருமணம் செய்து கொள்ளப் போவதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இருவரும் முன்னதாக 2020-ம் ஆண்டு மே மாதம் 31-ம் தேதி திருமணம் முடித்தனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா என்ற ஆண் குழந்தை உள்ளது.
இந்த திருமணம் நடைபெற்றபோது கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் திருமணம் எளிமையாக நடத்தப்பட்டது. இதனால் மீண்டும் திருமணத்தை பிரமாண்டமாக நடத்த ஹர்திக் பாண்ட்யா முடிவு செய்திருந்தார். இந்நிலையில் பாண்ட்யா – நடாஷாவின் திருமணம் உதய்ப்பூர் அரண்மனையில் இன்று நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இந்திய அணி வீரர்கள், திரை நட்சத்திரங்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். இவரது தலைமையிலான இந்திய அணி, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.