மது குடிக்க பந்தயம் கட்டி ஒருவர் உயிரைப் பறி கொடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த ஜெய் சிங் (45) என்ற ஆட்டோ ஓட்டுனர் மதுவுக்கு அடிமையானார். இவர் சக நண்பர்களான போலா, கேசவ் ஆகியோருடன் இணைந்து மது அருந்த சென்றார்.
அன்று இரவு ஜெய் சிங் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து ஜெய்சிங்கின் மகன் அவரை தேடியுள்ளார். சாலையில் விழுந்து கிடந்த ஜெய் சிங்கை கண்டுபிடித்த மகன் மருத்துவமனையில் அனுமதித்தார்.
ஆனால் ஜெய் சிங் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதே போல் ஆட்டோவுக்கு தவணை தொகை செலுத்த ஜெய் சிங் வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தையும் காணவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த ஜெய் சிங்கின் சகோதரர் சுக்பீர் சிங், காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனையடுத்து போலீஸார் ஜெய் சிங்குடன் மது அருந்திய போலா, கேசவ் ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அன்றைய தினம் ஜெய் சிங் நண்பர்களிடம் பந்தயம் கட்டி மது அருந்தியுள்ளார். 10 நிமிடத்தில் 3 குவாட்டர் பாட்டில் மது குடித்து காட்டுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
வெற்றி பெற்றால் பில்லை நீங்கள் கட்ட வேண்டும் என்று அவர் நண்பர்களிடம் கூறியுள்ளார். குறுகிய நேரத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் ஜெய் சிங் சுய நினைவை இழந்தார்.
அவர் மயங்கியதும் அவரது நண்பர்கள் இருவரும் ரூ.60,000 பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர். எனவே ஜெய் சிங் மரணம் தொடர்பாக போலா, கேசவ் ஆகியோரை கைது செய்த போலீஸார் சிறையில் அடைத்தனர்.
newstm.in