வீட்டை காலி செய்வது போல் நடித்து கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை போரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. வாகன சோதனையில் சூர்யா, பிரவீன் என்ற 2 இளைஞர்களை மடக்கி விசாரித்தபோது அவர்கள் கஞ்சா கடத்துவது தெரிய வந்தது.
அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினர், இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்களை பத்திரிகையாளர் என்று கூறி போலியான அடையாள அட்டையை காண்பித்துள்ளனர்.
தங்கள் தலைவன் திருவேற்காட்டை சேர்ந்த வினோத் குமார் என்றும், அவர் ஒரு புலனாய்வு பத்திரிகையில் ஆசிரியராக வேலை செய்வதாகவும், ஆந்திராவில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி கடத்தி வந்து சென்னை புறநகர் பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
வினோத் குமாரை தீவிரமாக தேடி வந்த போரூர் தனிப்படை அதிகாரிகள், அவருக்கு உதவியாக இருந்த அவரது உறவினர்கள் தேவராஜ், பாலாஜி உட்பட அனைவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
வினோத் குமாரின் வங்கி கணக்குகள் முற்றிலும் முடக்கப்பட்டுள்ள நிலையில், இவரது உறவினர்கள் யாராவது இந்த சம்பவத்தில் தொடர்பில் உள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
newstm.in