விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம வழக்கு சிபிசிடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
குண்டலபுலியூர் கிராமத்தில் இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக புகார் வந்தது. சலீம்கான் என்பவர், காப்பகத்தில் சேர்த்த வயதான தனது மாமாவை காணவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில், போலீஸாரும், வருவாய்துறையினரும் ஆசிரமத்தில் சோதனை நடத்தினர். அதில் உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடைபெற்று வருவது தெரிய வந்தது.
பராமரிக்கப்பட்டு வருபவர்களை அடித்து துன்புறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது உள்ளிட்ட பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின.
இதையடுத்து ஆசிரமத்தில் இருந்த 33 பெண்கள் உட்பட 203 பேர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கண்காணிப்பாளரும் நேரில் சென்று, சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர்.
முதற்கட்டமாக இந்த வழக்கில் ஆசிரம பணியாளர்கள் பிஜூ மோகன், முத்துமாரி, அய்யனார், கோபிநாத் ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். குரங்கு தாக்கி காயமடைந்ததாக ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின், அவரது மனைவி மரியா ஜூபின் ஆகிய இருவரும் சிகிச்சை பெற்று வந்தனர்.
அதன்பின்னர் மரியா ஜூபின் (42) டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு மருத்துவமனை வாசலிலேயே கைது செய்யப்பட்டார். மேலும் ஆசிரம ஊழியர்களான சதீஷ் (35), தாஸ் (75) பூபாலன் (34) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சிகிச்சை பெற்று வரும் அன்பு ஜூபினும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கின் விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
newstm.in