முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் மற்றும் வர்த்தகத்துறை சார்பில் வேலூர் மாவட்டத்தில் 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி, சிப்காட் ஓசூர் தொழிற்பூங்காவில் 150 கோடி ரூபாய் முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள ஐநாக்ஸ் ஏர் ப்ராடக்ட்ஸ் நிறுவனத்தின் அதிஉயர் தூய்மையான திரவ மருத்துவ ஆக்ஸிஜன் உற்பத்தி ஆலை மற்றும் சென்னையில் ரூ.110 கோடி முதலீட்டில் நிறுவப்பட்டுள்ள GX குழுமத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு அரசிற்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே ரூ.7,614 கோடி முதலீட்டில் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
2021-2022 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் டைடல் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பிற்கிணங்க, முதற்கட்டமாக விழுப்புரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கள் அமைப்பதற்கு 24.6.2022 அன்று முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
அதன் தொடர்ச்சியாக, வேலூர் மாவட்டம், மேல்மொனவூர்- அப்துல்லாபுரத்தில் அமைந்துள்ள அரசு தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில், 4.98 ஏக்கர் நிலப்பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு ரூ.30 கோடி மதிப்பீட்டில் தரை மற்றும் நான்கு தளங்களுடன் 60,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படவுள்ள மினி டைடல் பூங்காவிற்கான கட்டடத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
ஓலா எலக்ட்ரிக் மொபிலிடி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தனது துணை நிறுவனங்களான ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) பிரைவேட் லிமிடெட் மற்றும் ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) பிரைவேட் லிமிடெட் மூலமாக முதற்கட்டமாக, மின்கல உற்பத்தி ஆலை மற்றும் மின் வாகன உற்பத்தி ஆலை நிறுவ முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், உறுதி செய்யப்பட்ட முதலீடு 7,614 கோடி ரூபாய் ஆகும். இதில் ஓலா செல் டெக்னாலஜீஸ் (OCT) நிறுவனம் 5,114 கோடி ரூபாயும், ஓலா எலக்ட்ரிக் டெக்னாலஜீஸ் (OET) நிறுவனம் 2,500 கோடி ரூபாயும் முதலீடு செய்யவுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும்.
இத்திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பர்கூர் தொழிற் பூங்காவில் நிறுவப்பட உள்ளது. இதன்மூலம் 1.40 லட்சம் நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி மற்றும் 20 கிகாவாட் மின்கலன்கள் உற்பத்தித் திறன் கொண்ட ஆலைகளை அமைப்பதற்கு இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுக்கும் ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்குமிடையே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் முன்னிலையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது.