இளம்பெண் ஒருவர் தனக்கு குழந்தை பிறந்த 3 மணி நேரத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி அசத்தியுள்ளார்.
பீகார் மாநிலம் பன்கா மாவட்டத்தைச் சேர்ந்த ருக்மிணி குமாரி (22) என்ற பெண் பட்டியலினத்தை சேர்ந்தவர். இவர் திருமணமாகி கர்ப்பமாக இருந்துள்ளார். அதே நேரத்தில் 10ஆம் வகுப்பும் படித்து வந்துள்ளார்.
பீகாரில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. நிறைமாத கர்ப்பிணி ருக்மிணி கடந்த செவ்வாய் கிழமை கணிதத் தேர்வு எழுதிவிட்டு வீடு திரும்பினார். இந்நிலையில், அன்று இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், புதன்கிழமை அதிகாலை 6 மணி அளவில் சுகப்பிரசவம் மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அன்றைய தினம் ருக்மிணிக்கு அறிவியல் பாட பொதுத்தேர்வு இருந்தது.
பிரசவமான உடலுக்கு ஓய்வு தேவை, தேர்வை அடுத்த முறை எழுதிக்கொள்ளலாம் என அனைவரும் அறிவுறுத்தனர். ஆனால் கல்வி முக்கியம் என்பதை உணர்ந்த ருக்மணி, ஆம்புலன்ஸ் மூலம் சென்று பொதுத்தேர்வை எழுதியுள்ளார்.
பின்னர் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்துவிட்டு நலமுடன் மீண்டும் மருத்துவமனைக்கு திரும்பினார். கல்வி மீதுள்ள உறுதியால் ருக்மிணியை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
newstm.in